திருப்பூரில் வாய்த்தகராறில் கத்திக்குத்து காயம்பட்ட தொழிலாளி பரிதாப சாவு

திருப்பூரில் வாய்த்தகராறில் கத்திக்குத்து காயம்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-12 21:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் ஷெரீப்காலனி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 39). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கும் பெரிச்சிப்பாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியான ரஞ்சித்துக்கும்(27) இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 25–ந் தேதி இரவு ரஞ்சித், குறிஞ்சிநகருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த லோகநாதனுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபம் அடைந்த ரஞ்சித் தான் வைத்திருந்த கத்தியால் லோகநாதனின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை தேடிவந்தனர். 2 நாட்களுக்கு பிறகு ரஞ்சித் திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2–ல் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் அவர் உள்ளார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த லோகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்