வன உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

வன உரிமை சட்டத்தின் படி வனப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2018-11-12 22:00 GMT
தேனி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடமலை-மயிலை வன விவசாயிகள் பாதுகாப்பு குழு சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. வன உரிமைச்சட்டத்தின் படி வனப்பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வரும், விவசாயம் செய்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, வருசநாடு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், வனத்துறையின் நெருக்கடியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு நிர்வாகி பெருமாள் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பட்டா வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் வரிசையாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப் போவதாக தெரிவித்தனர். அப்போது போலீசார், மொத்தமாக செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், மக்களின் சார்பில் பிரதிநிதிகள் 10 பேர் மட்டும் சென்று மனு அளிக்குமாறும் தெரிவித்தனர்.

இதனால், தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் அங்கு நேரடியாக வந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்து விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்