கடலூரை மிரட்டும் ‘கஜா’ புயல்: தயார் நிலையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் - முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடலூரை மிரட்டும் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Update: 2018-11-12 21:45 GMT
கடலூர், 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வருகிற 15-ந் தேதி முற்பகலில் சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புயலை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடந்தது.இந்த நிலையில் புயலின்போது மக்களை தங்க வைப்பதற்காக 40 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு வழங்குவதற்காக அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களும் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர புயல் தாக்கினால் உடனடி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 167 பொக்லைன் எந்திரங்கள், 155 டீசல் ஜெனரேட்டர்கள், 152 மரம் அறுக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்துத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் விடுமுறை இன்றி பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் மரம் அறுக்கும் எந்திரங்கள், லைப் ஜாக்கெட்டுகள், கயிறு, ஏணிகள், 7 ஒலிபெருக்கி சாதனங்கள் போன்ற கருவிகள் உள்ளன. அவற்றில் பழுதடைந்திருந்த மரம் அறுக்கும் எந்திரங்களை பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடலூரை ‘கஜா’ புயல் தாக்கினால் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் ஆயத்த நிலையில் உள்ளனர். கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மீட்பு பணிக்கு தேவையான ரப்பர்படகு, பாதுகாப்பு கவசம், கயிறு, பிளாஸ்டிக் மிதவை, கைவிளக்குகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.

இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கஜா’ புயலின்போது மக்களை மீட்பதற்காக கடலூர் தேவனாம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், ரமேஷ், கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற போலீஸ்காரர்கள் என 26 பேர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் 35 பேர் வரவழைக்கப்படுவார்கள் என்றார்.

மேலும் செய்திகள்