வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மர்ம சாவு கொலைசெய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

கொள்ளிடம் அருகே வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-12 22:15 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பச்சபெருமாநல்லூர் கிராமம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சியாமளா (வயது 72). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் சியாமளா மட்டும் பச்சபெருமாநல்லூரில் உள்ள அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சியாமளா, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்குள் சென்றார். அன்று முதல் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

கடந்த 4 நாட்களாக வீட்டின் கதவு திறக்காமலேயே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் இருந்த சோபாவில் சாய்ந்தபடியே முகம் மற்றும் கால்கள் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் அருள்பிரகாஷ் புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சியாமளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்