எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை தினகரனிடம் இருந்து காப்பாற்றி விட்டனர் அமைச்சர் பேச்சு

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை தினகரனிடம் இருந்து காப்பாற்றி விட்டனர் என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Update: 2018-11-12 23:00 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் அருகே பெருமாண்டியில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கமல்ராஜ் தலைமை தாங்கினார். கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், நகர செயலாளர் ராம.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவரணி செயலாளர் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, பாரதிமோகன் எம்.பி., திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், அ.தி.மு.க. பேச்சாளர் அப்பாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் துரைக்கண்ணு பேசியதாவது:-

குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.116 கோடியை தாராளமாக வழங்கியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வறட்சி இருந்தாலும் வளர்ச்சி கண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான்.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கும்படி மத்திய அரசை பாரதிமோகன் எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பானை உடைந்தால் திருவோடு கிடைக்கும் என்பார்கள். அதே பானை சுக்குநூறாக உடைந்தால் எதுவும் கிடைக்காது. அந்த நிலைமையில் தான் டி.டி.வி.தினகரனை நம்பி சென்ற எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்தார் தினகரன்.

நல்ல வேளையாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் தினகரனிடம் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னதாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி, மாநில கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், மாவட்ட பிரிவு செயலாளர் பாண்டியன், சோழபுரம் பேரூர் செயலாளர் ஆசாத்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பகவதி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்