அதிவிரைவு படை வீரர்கள் தேனி வருகை - 5 நாட்கள் கொடி அணிவகுப்பு

மத்திய அரசின் அதிவிரைவுப்படை வீரர்கள் தேனிக்கு வந்துள்ளனர். அவர்கள் மாவட்டத்தில் 5 நாட்கள் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர்.

Update: 2018-11-13 23:00 GMT
தேனி,

மத்திய அரசின் பாதுகாப்பு படைகளில் ஒரு அங்கமாக ஆர்.ஏ.எப். என்ற அதிவிரைவுப்படை செயல்படுகிறது. இந்த அதிவிரைவுப்படையின் 105-வது பட்டாலியன் பிரிவு கோவை மாவட்டம் வெள்ளலூரில் இயங்கி வருகிறது. இந்த படைவீரர்கள் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தேனி மாவட்டத்துக்கு ஆர்.ஏ.எப். வீரர்கள் நேற்று வந்தனர். உதவி கமாண்டன்ட் வெங்கடேஷ் தலைமையில், 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 42 பேர் தேனி வந்துள்ளனர். இவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் மாவட்டத்தில் பதற்றமான இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர்.

இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் பல்வேறு விவரங்களை ஆர்.ஏ.எப். படையினர் சேகரித்து உள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தொகை, சாதி வாரியாக மக்கள் தொகை விவரம், பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்கள் ஆகிய விவரங்களை சேகரித்துள்ளனர்.

அதன்படி, இன்று (புதன் கிழமை) உத்தமபாளையம் போலீஸ் உட்கோட்ட பகுதிகளில் உள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர். நாளை (வியாழக்கிழமை) போடி உட்கோட்டத்தில் கோம்பை, தேவாரம், போடி ஆகிய இடங்களிலும், 16-ந்தேதி ஆண்டிப்பட்டி உட்கோட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்துகிறார்கள்.

17-ந்தேதி பெரியகுளம் உட்கோட்டத்தில் ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, பெரியகுளம் ஆகிய இடங்களிலும், 18-ந்தேதி தேனி உட்கோட்டத்தில் தேனி, அல்லிநகரம் ஆகிய இடங்களிலும் கொடி அணி வகுப்பு நடக்கிறது.

மேலும் செய்திகள்