கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கந்தசஷ்டி விழாவை யொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-11-13 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு பால், தயிர், பழவகைகள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலையில் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.

இதேபோல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நகர நகை வியாபாரிகள் சங்கம், நகர விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில் 41-வது ஆண்டு கந்த சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி நேற்று இரவு சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (புதன்கிழமை) மாலை சுப்ரமணிசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள புகழ்பெற்ற தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் பாலதண்டா யுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கடந்த 10-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. 11-ந் தேதி ருத்திர ஜப ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை சண்முகா ஹோமம், மகா அபிஷேகம், யாக பூஜைகள், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் கந்த சஷ்டியை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், வெண்ணெய், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, மாம்பழம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பாலதண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் அருகில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள வீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்