‘கஜா’ புயல் எதிரொலி: அரசு-தனியார் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

கஜா புயல் எதிரொலியாக புதுக்கோட்டையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2018-11-13 23:00 GMT
புதுக்கோட்டை,

கஜா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த அரசு முதன்மை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசுகையில், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள் உரிய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கனமழை மற்றும் புயல் நேரங்களில் தேவைக்கேற்ப தற்காலிக மின்இணைப்பு துண்டிப்பு செய்து பாதுகாக்கவும், மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான முறையில் மின் இணைப்பு சரிசெய்து உடனடி மின்இணைப்புகளை மின்சார வாரிய அலுவலர்கள் வழங்க வேண்டும். மேலும் ஆழ் கடலில் இருக்கும் மீனவர்கள் கரைகளுக்கு வந்து சேர்ந்த விபரத்தினை உறுதி செய்து மீன் வளத்துறை உதவி இயக்குனர் அறிக்கை அளிக்க வேண்டும்.

மழையினால் சாலைகளில் மரங்கள் ஏதேனும் சாய்ந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் அவற்றை உடனடியாக பொதுப்பணித்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறையினருடன் இணைந்து அகற்ற வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையினால் ஏற்படும் வெள்ள சேதங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தில் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற எண்ணிலும், 9500589533 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்கள் தெரிவிக்கலாம் என்றார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்