செல்போன் கடை ஊழியரை தாக்கி ரூ.60 லட்சம் பறித்த வழக்கில் 3 பேர் கைது

ஏழுகிணறு பகுதியில் செல்போன் கடை ஊழியரை தாக்கி ரூ.60 லட்சம் பறித்துச்சென்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-13 22:00 GMT
பிராட்வே,

சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜாபர் (வயது 35). இவர் அப்பகுதியில் ஆன்லைன் மூலம் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் அதே பகுதியை சேர்ந்த ரபிகான் (36) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி இரவு ஜாபர், ரபிகானிடம் கடையில் இருந்த ரூ.60 லட்சத்தை கொடுத்து ஏழுகிணறு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் கொடுத்து வரும்படி கூறியுள்ளார்.

பணத்தை வாங்கிய ரபிகான் அதனை மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஏழுகிணறு ஆணைக்கார தெருவில் சென்றபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் ரபிகானை சரமாரியாக தாக்கிவிட்டு பணப்பையை பறித்து சென்றனர். இதில் காயம் அடைந்த ரபிகான் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏழுகிணறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி விசாரிப்பதற்காக வடக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை கமிஷனர் இ.டி.சாம்சன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

ரபிகான் பணத்தை எடுத்து கொண்டு புறப்பட்ட இடத்திலிருந்து, வழிப்பறி சம்பவம் நடந்த இடம் வரை உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான உருவங்களை வைத்து விசாரணை நடத்தியபோது, கொடுங்கையூரை சேர்ந்த கிஷோர் (24), பொன்னேரியை சேர்ந்த சதீஷ் (28) ஆகிய 2 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் வால்டாக்ஸ் சாலையில் பதுங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த கிஷோர் மற்றும் சதீஷை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ராயபுரத்தை சேர்ந்த ஷேக்தாவூத் (42) என்பவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.9½ லட்சம், 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்