நங்கநல்லூரில் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது

நங்கநல்லூரில் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-13 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர், பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 38). இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-

‘ஆவடியை சேர்ந்த ரஜினி (எ) அன்புச்செல்வன் (40) என்பவரிடம் ரூ.5 லட்சத்தை 10 சதவீத வட்டிக்கு கடனாக வாங்கினேன். கடன் தொகையில் முதல் மாத வட்டி ரூ.50 ஆயிரம் போக, மீதமுள்ள ரூ.4½ லட்சத்தை பெற்றுக்கொண்டேன். ரூ.20 ரூபாய் முத்திரை தாள் மற்றும் வெற்று பேப்பர்களில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு ரஜினி அந்த பணத்தை கொடுத்தார்.

அவர் அந்த வெற்றுத் தாள்களில் எனக்கு சொந்தமான நங்கநல்லூர் பாலாஜி நகரில் உள்ள வீட்டை குத்தகை விட்டது போன்று குறிப்பிட்டு போலியான ஆவணம் தயார் செய்துள்ளார்.

மேலும் அந்த வீட்டில் வந்து சட்டவிரோதமாக குடியேறி உள்ளார். நான் வாங்கிய பணத்தை வட்டியுடன் ரூ.7 லட்சமாக திருப்பி செலுத்திய பின்னரும் வட்டியாக மேற்கொண்டு ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் வீட்டை காலி செய்வேன் எனக்கூறியதோடு என்னை தாக்கி கீழே தள்ளி மிரட்டல் விடுத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுபற்றி போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

விசாரணையில், ரஜினி கந்து வட்டி கேட்டு சுப்ரமணியத்தை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து ரஜினி (எ) அன்பு செல்வனை கந்துவட்டி வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்பு அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்