மனைவியை ஏமாற்ற 10 பவுன் நகைகளை பறித்து சென்றதாக நாடகமாடிய புரோக்கர் சிக்கினார்

மனைவியை ஏமாற்ற 10 பவுன் நகைகளை பறித்து சென்றதாக நாடகமாடிய புரோக்கர் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-13 23:00 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் சேத்தன் ராஜ்கோர்(வயது 39). இவர் மரம் வாங்கி விற்கும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் கையில் ரத்த காயத்துடன் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “பொன்மலை சந்தை ‘சி’ டைப் பிரிவு அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தன்னை கத்தியால் கிழித்து கைச்செயின், தங்க சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகளை பறித்து சென்று விட்டனர்” என்று கூறி இருந்தார்.

தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் அப்படி ஒரு சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. மேலும், சங்கிலி பறிப்பு நடந்தபோது, தான் செல்போன் பேசி கொண்டு சென்றதாக அவர் கூறி இருந்தார். ஆனால், அவரது செல்போனில் போன் பேசியதற்கான எண்கள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் புகார் கொடுத்த சேத்தன் ராஜ்கோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவியை ஏமாற்றுவதற்காக நகைகளை பறித்து சென்று விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், “சேத்தன் ராஜ்கோர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அவருக்கு கொடுக்க பணம் தேவைப்பட்டதால் சமீபத்தில் தனது கைச்செயினை அடகு வைத்துள்ளார். கைச்செயினை அடகு வைத்ததற்கான ரசீதும் அவரிடம் உள்ளது.

மேலும், தங்க சங்கிலியை வீட்டிலேயே மனைவிக்கு தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். இந்த விஷயம் மனைவிக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்பதால் நகைகளை 3 பேர் பறித்து சென்று விட்டதாக நாடகமாடியுள்ளார். மேலும், கொள்ளையர்கள் வழிப்பறி செய்ததாக நம்ப வைக்க தனக்கு தானே கையில் லேசாக கிழித்துள்ளா” என்றனர். இதுகுறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்