குமரி மாவட்டத்தில் கோலாகலம்: முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்தது திரளான பக்தர்கள் தரிசனம்

குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-11-13 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் சன்னதியில் 41-வது ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரபத்மன் என்ற சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு மகா கணபதிஹோமம், 11 மணிக்கு அபிஷேகம் அலங்காரம், மதியம் 1.30 மணிக்கு தீபாராதனை, சுவாமி அம்பாளுக்கு சீர்செய்தல், மதியம் 2 மணிக்கு வேல்வாங்க புறப்படுதல் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு சுவாமி சூரனை வதம் செய்ய புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.

நான்கு ரதவீதிகளிலும் சுற்றி வந்த பின்னர் மாலை 6.30 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அப்போது முருகப்பெருமான் சூரனை வேலால் குத்தி வதம் செய்தார். அப்போது திடலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி, முருகனை வழிபட்டனர். சூரசம்ஹார நிகழ்ச்சியின் முடிவில் வாணவேடிக்கை நடந்தது. இரவில் சுவாமி மயில் வாகனத்தில் அமர்ந்து ரதவீதி பவனி வருதல் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

சஷ்டி விழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் நாகராஜா கோவில் கலையரங்க மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் அகண்ட நாம ஜெபம் மாலை வரை நடந்தது. மாலை 5 மணிக்கு முருகன் கோவிலின் மேற்கு வாசல் வழியாக வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி வந்தார். சூரனை பின் தொடர்ந்த படி பல்லக்கில் கோவிலின் 4 ரதவீதிகளை சுற்றி வந்து கிழக்குவாசலில் வைத்து முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

சுவாமி மீண்டும் மேற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோவில் தெப்ப குளத்தில் நீராடி முருகனை தரிசனம் செய்தனர். இதேபோல், பத்மநாபபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் வீதி உலா வர பத்மநாபபுரம் தேர் வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் வவ்வால்குகை பாலமுருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தது. விழாவில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. முருகனும், சூரனும் வாகனத்தில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து ஆரல்வாய்மொழி சந்திப்பு பகுதிக்கு வந்து மீண்டும் சுப்பிரமணியபுரத்துக்கு சென்றனர். அங்கு சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு காமராஜர் அறக்கட்டளை சார்பில் தேநீர் வழங்கப்பட்டது.

தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 8-ந் தேதி தொடங்கி நடந்தது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம், பக்திபஜனை ஆகியன நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. அங்குள்ள பெரிய திடலில் முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி தேரிவிளை குண்டல் முருகன்கோவிலில் கந்தசஷ்டி விழா 8-ந் தேதி தொடங்கி நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார். விழா நாட்களில் தினமும் முருகனுக்கு அபிஷேகம், விஷேச பூஜை, அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது. 6-ம் விழாவான நேற்று மாலை கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகனும், மற்றொரு வாகனத்தில் சூரனும் எழுந்தருளி மேளதாளத்துடன் புறப்பட்டு ஒற்றைப்புளி சந்திப்பு, சுவாமிநாதபுரம், விவேகானந்தபுரம் சந்திப்பு, சக்கரதீர்த்த குளக்கரை வரை சென்று பழத்தோட்டம் வழியாக முருகன்குன்றம் மலை அடிவாரத்தை மாலை 6 மணிக்கு சென்றடைந்தனர்.

வழிகளில் சூரனுக்கு சிங்கமும், அரக்கமுகம், விஸ்வரூபமுகம் ஆகிய 3 முகங்கள் மாற்றி முருகனுடன் போரிடம் நிகழ்ச்சி நடந்தது. இறுதியாக முருகன்குன்றம் மலை அடிவாரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சூரனை, முருகபெருமான் வேலால் குத்தி வதம் செய்வதும், அப்போது சூரனின் வயிற்றில் இருந்து சேவல் வெளிவரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். அதைதொடர்ந்து சூரனுடைய உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேரிவிளை குண்டல் முருகன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல், முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பக்தர்களுக்கு சுக்குநீர் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. விழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கா ஏற்பாடுகளை முருகன்குன்றம் வேல்முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து வருகிறார்கள்.

குளச்சல் அஞ்சாலி அம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ தேவசேனாபதி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. விழாவில் நேற்று முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மருங்கூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. மாலை 3 மணிக்கு சுப்பிரமணியசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலிலும், பெருவிளை தெய்வி முருகன் கோவிலிலும் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்