ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய ராணுவ வீரர் பரிதாப சாவு

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய ராணுவ வீரர் பரிதாப பலியானார்.

Update: 2018-11-13 22:45 GMT
ஜோலார்பேட்டை,

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சர்க்காவாதிபிடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மீரானா (வயது 37). பஞ்சாப் மாநிலத்தில் இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார். அந்த ரெயில் ஜோலார்பேட்டை 2-வது பிளாட்பாரத்தில் மாலை 6.30 மணிக்கு வந்து நின்றது. ரெயில் புறப்பட்டதும் ஓடும் ரெயிலில் இருந்து திடீரென மீரானா கீழே இறங்க முயன்றார்.

அப்போது நிலைதடுமாறி விழுந்த அவரது கால்கள் ரெயில் தண்டவாளத்திற்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கியது. அடுத்த வினாடியே உள்ளே அவர் விழுந்து விட்டார். இதனை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். அப்போது மீரானாவின் உடலில் ரெயில் சக்கரம் ஏற இருந்த நிலையில் ரெயில் அந்த இடத்திலேயே நின்றது. எனினும் அவரது கால்கள் துண்டாகிவிட்டன.

இதனை பார்த்த ரெயில்வே போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. போலீசார் அந்த செல்போனில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் மீரானாவின் மனைவி வர்ஷா பேசினார். அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் கூறவே அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருப்பத்தூருக்கு விரைந்தார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மீரானா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்