குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் சாவு

குமாரபாளையம் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் இறந்தனர்.

Update: 2018-11-13 22:45 GMT
குமாரபாளையம்,

ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் புவனேஷ் (வயது 19), குணசேகர் (19). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு டிப்ளமோ படித்து வந்தனர்.

நேற்று காலை மாணவர்கள் இருவரும் வழக்கம்போல பஸ்சில் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரியில் நேற்று தேர்வு நடைபெற்றதால், மாணவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்து வெளியேறினர். பின்னர் இருவரும் கல்லூரி அருகே சாணார்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது அவர்களுடன் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோரும் காவிரி ஆற்றில் குளித்தனர்.

காவிரி மூழ்கி சாவு

இந்த நிலையில் வெகுநேரம் ஆகியும், மாணவர்கள் இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) நல்லதுரை தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மாணவர்களை தேடினர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாணவர்கள் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த குமாரபாளையம் போலீசார், காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்