வடகோவை மேம்பாலத்தில் நெருப்பு பலூன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களால் பரபரப்பு

நெருப்பு பலூன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் பீதிஅடைந்தனர்.

Update: 2018-11-13 23:15 GMT

கோவை,

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் ஒரு இளம்பெண் மற்றும் 3 வாலிபர்கள் நின்றுகொண்டு இருந்தனர். பறக்கும் லாந்தர் என்று அழைக்கப்படும் மெல்லிய கம்பி மற்றும் பாலித்தீன் பையால் ஆன பொருளின் கீழ் பகுதியில் தீப்பற்ற வைத்து பலூன் போன்று அதனை பாலத்தில் இருந்து பறக்கவிட்டுக்கொண்டு இருந்தனர்.

ஆனால் அந்த பலூன் தீயுடன் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லும் சாலையின் ஓரத்தில் விழுந்தது. மேலும் பாலத்தின் நடுவிலும் பறக்கவிட்டனர். அப்போது வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தன. வாகனங்களின் பெட்ரோல் டேங்கர் பகுதியில் இந்த பலூன் பறந்துசென்று விழுந்தால் மிகவும் விபரீதமாகி இருக்கும். நல்லவேளையாக எதுவும் நடைபெறவில்லை.

பாலத்தை ஒட்டிய பகுதியில் வனக்கல்லூரி, வனத்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. வாலிபர்களின் இந்த விளையாட்டினால் சிறிய அளவிலான தீ பரவினாலும் மிகப்பெரிய ஆபத்தையும், தீவிபத்தையும் ஏற்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் நெருப்பு பலூன்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.அப்போது அந்தபகுதியில் வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.நடந்து சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலரும் பீதி அடைந்தனர்.

தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக இதனை பொழுது போக்காக பறக்கவிட்டதாக வாலிபர்கள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–

கோவையிலுள்ள மேம்பாலங்களில் நள்ளிரவுக்கு மேல் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருக்கும்.இந்த நேரங்களில் வாலிபர்கள், இளம்பெண்கள் நடுரோட்டில் அமர்வது,ஓடி விளையாடுவது, வாகனங்களில் அபாயகரமாக அமர்ந்து செல்பி எடுப்பது என்று

விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெரிய விபத்துக்கள் நடக்கவாய்ப்பு இருக்கிறது.தற்போது ஏதோ பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்று தீயுடன் விளையாடி அதை படம் எடுத்து இணைய தளத்தில் வைரலாக்கி இருக்கிறார்கள்.இதை பார்த்து மேலும் மோசமான விளையாட்டுகளில் இளைய தலைமுறையினர் ஈடுபடுவார்கள் நென்பதில் சந்தேகமில்லை.எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு ரோந்து செல்லும் போலீசார் இதை கண்காணிக்க வேண்டும்.நெருப்பு பலூன்களுடன் பிறந்தநாள் கொண்டாடியவர்களை கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்