டிரைவரை கீழே தள்ளி விட்டு தேங்காய்களுடன் லாரி கடத்தல்; 6 பேர் கைது

டிரைவரை கீழே தள்ளி விட்டு தேங்காய்களுடன் லாரியை கடத்திச்சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-13 23:15 GMT

நெகமம்,

சென்னை போரூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). லாரி உரிமையாளர். இவரிடம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த மனோகரன் (30) என்பவர் டிரைவராக உள்ளார். கடந்த 11–ந்தேதி மனோகரன் கோவைக்கு தேங்காய் லோடு ஏற்றுவதற்காக லாரியில் வந்தார். பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தோப்பில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு நெகமம் வழியாக வந்து கொண்டு இருந்தார்.

அப்போது லாரியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேரும் மற்றும் காரில் 4 பேருமாக 6 மர்ம ஆசாமிகள் வந்தனர். நெகமத்தை அடுத்த பல்லடம் ரோட்டில் மாயாண்டி ஈஸ்வரன் கோவில் அருகே லாரி வந்தபோது, 6 பேரும் சேர்ந்து லாரியை வழிமறித்தனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத லாரி டிரைவர் மனோகரன் லாரியை நிறுத்தினார். உடனே 6 பேரும் சேர்ந்து மனோகரனை மிரட்டி காரில் ஏற்றினர். காரில் 4 பேர் இருந்தனர். இதனை தொடர்ந்து லாரியை 6 பேரில் ஒருவர் ஓட்டினார். லாரிக்கு முன்பாக கார் சென்று கொண்டிருந்தது. பல்லடம்–திருச்சி ரோட்டில் சென்றபோது காரில் இருந்த லாரி டிரைவர் மனோகரனை கீழே தள்ளி விட்டனர். பின்னர் சிறிது தூரம் சென்றதும் சாலையோரத்தில் ஒரு இடத்தில் லாரியை நிறுத்தி, அதில் இருந்த தேங்காய்களை இறக்கி வைத்தனர். பின்னர் அந்த லாரியை அங்கிருந்து கடத்தி சென்றனர். ரூ.3 லட்சம் தேங்காய்கள் உள்பட லாரியின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்த நிலையில் லாரி அவினாசி அருகே சென்றபோது திடீரென நின்று விட்டது.

இதனால் லாரியை ஓட்டிச்செல்ல முடியாமல் அந்த 6 பேர்கொண்ட கும்பல் லாரியை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் லாரி டிரைவர் மனோகரன் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கும்பலை தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த லாரியில் இருந்து கொட்டிவைத்திருந்த தேங்காயை டெம்போ வேன் மூலம் அள்ளிக்கொண்டிருந்த ஒருநபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர், பொள்ளாச்சி கோவில் பாளையத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (26) என்பதும், லாரியை கடத்திய 6 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி கோவில்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (25), பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல் (25), திவான்சாபுதூரை சேர்ந்த மணிகண்டன் (23), மீனாட்சிபுரத்தை சேர்ந்த அப்துல்ரகுமான் (23), சந்தோஷ் (20) ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலை இல்லாமல் இருந்ததால் 6 பேரும் சேர்ந்து லாரியை கடத்திச்சென்று விற்று பணத்தை பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, லாரியை மீட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், லாரியில் இருந்து தள்ளி விடப்பட்ட டிரைவர் மனோகரன், சுதாரித்துக்கொண்டு அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து சென்னையில் உள்ள தனது உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவரது உரிமையாளர் தனது லாரிக்கு ஜி.பி.எஸ்.தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்ததால் லாரி எங்கு நிற்கிறது என்பது தெரியவந்தது. இதன் மூலம் கடத்தல் கும்பல் மற்றும் லாரியை பிடிப்பது எளிதாக அமைந்தது என்றனர்.

மேலும் செய்திகள்