சாந்தாகுருசில் குழந்தைகளை பார்க்க வந்த சேலம் வாலிபர் படுகொலை

சாந்தாகுருசில் தனது குழந்தைகளை பார்க்க வந்த சேலம் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மாமியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-13 22:45 GMT
மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு காவ்தேவி குடிசை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களது மகன் ஸ்ரீதர்(வயது33). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதில், அவரது மனைவி கோபித்து கொண்டு அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இருவருக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில், ஸ்ரீதர் சொந்த ஊரான சேலம் அன்னதான பட்டிக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், கடந்த 11-ந்தேதி தர் மும்பை வந்தார். பின்னர் தனது குழந்தைகளை பார்க்க ஆசைப்பட்டு நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் மாமியார் வீட்டிற்கு சென்ற அவர், தனது மனைவியை சந்தித்து குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறினார்.

ஸ்ரீதர் வந்துள்ளதை அறிந்து கோபம் அடைந்த அவரது மாமனார் இளங்கோ, மாமியார் பச்சியம்மாள், மைத்துனர் மகேந்திரன், உறவினர்கள் கணேசன், விக்கி சக்ரா ஆகியோர் சேர்ந்து அவரிடம் தகராறு செய்தனர்.

மேலும் கூர்மையான ஆயுதத்தால் ஸ்ரீதரை குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த வக்கோலா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மகேந்திரன், பச்சியம்மாள், கணேசன், விக்கி சக்ரா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தரின் மாமனார் இளங்கோவை போலீசார் தேடி வருகிறார்கள்.

பின்னர் கைதான 4 பேரும் பாந்திரா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்