கார் மோதியதால் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி - கோவை பட்டதாரி கைது

சேலத்தில் கார் மோதியதில் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார். இது தொடர்பாக கோவை பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-13 23:03 GMT
சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பாட்டப்பன் நகரை சேர்ந்தவர் அருண்மாறன் (வயது 60). இவர் இரும்பாலையில் பணியாற்றி கடந்த மாதம் தான் ஓய்வு பெற்றார். இவர் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று காலை பட்டர்பிளை மேம்பாலத்தில் அருண்மாறன் நடை பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக கோவை கோவில்பாளையத்தை சேர்ந்த கதிரேசன் (36) என்பவர் காரில் வந்தார். இந்த கார் எதிர்பாராதவிதமாக அருண்மாறன் மீது மோதியது. இதையடுத்து அவர் சுமார் 50 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அருண்மாறன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதனிடையே கார் மேம்பாலத்தில் மோதிய வேகத்தில் காரில் இருந்த ஏர்பலூன் விரிந்ததால் கதிரேசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையறிந்த அந்த வழியாக சென்றவர்கள் அங்கு கூடினர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதைத்தொடந்து அருண்மாறனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண்மாறனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கதிரேசன் எம்.பி.ஏ. படித்து உள்ளதும், பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், கோவையில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூரு சென்றபோது விபத்து நடந்ததும் தெரியவந்தது. மேலும் விபத்தில் இறந்த அருண்மாறனுக்கு ஆசிரியை ஜேன்பால் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்