ஆத்தூரில் பள்ளி மாணவி கொலை: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபருக்கு மனநல பரிசோதனை

ஆத்தூரில் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மனநல பரிசோதனை நடந்தது.

Update: 2018-11-13 23:28 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்பட்டி தெற்கு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மகள் ராஜலட்சுமி (வயது 14). இவள் தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மாதம் ராஜலட்சுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் வந்து ராஜலட்சுமியை கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.

இது தொடர்பாக ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தினேஷ்குமார் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தினேஷ்குமார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினேஷ்குமாருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மனநல பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும், காலில் உள்ள காயத்திற்கு சிகிச்சை அளிக்கவும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தினேஷ்குமார் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஸ்டிராங் ரூமில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், தினேஷ் குமார் நல்ல நிலையில் இருப்பதாகவும், மனநிலை சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் தேவை இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய காலில் இருக்கும் காயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்