புயல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக நாராயணசாமி ஆலோசனை

கஜா புயல் பாதுகாப்பு தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-11-14 00:15 GMT

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை பிற்பகலில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கிறது. இதையொட்டி புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன், அரசு செயலாளர்கள் அன்பரசு, அலைஸ்வாஸ், சுந்தரவடிவேலு, கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, பேரிடர் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் ஜா மற்றும் புதுவை அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

கஜா புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. இந்த புயல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளனர். புயலை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயாராக உள்ளது.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக மீட்கவும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புதுவையில் ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பி விட்டனர். காரைக்காலில் மட்டும் 2 படகுகள் வரவேண்டி உள்ளது.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 125 கி.மீ. வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. புயலின் தாக்கம் புதுவையிலும் இருக்கும். அப்போது கனமழை பெய்யும். எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை சமுதாய நலக்கூடங்கள், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சுகாதாரத்துறையில் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு 2 கம்பெனி புதுவைக்கு வந்துள்ளது. அதில் ஒரு கம்பெனி காரைக்காலுக்கு அனுப்பி வைக்கப்படும். காரைக்காலில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

எனவே நான் காரைக்கால் செல்ல உள்ளேன். அங்கு புயல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க உள்ளோம். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் விதமாக அனைத்து துறைகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்