ஆரணியில் 2,427 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

ஆரணியில் 2 ஆயிரத்து 427 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2018-11-14 23:00 GMT

ஆரணி,

ஆரணி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அரசின் சார்பில் 11, 12–ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தனத்தனியே அனைத்து பள்ளிகளிலும் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

ஆரணி தொகுதி செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., ஆரணி உதவி கலெக்டர் தண்டாயுதபாணி, பள்ளி நிர்வாகத்தலைவர், தாளாளர், பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர்கள் பூபதி, அமிர்தராஜ், ஜோதிசெல்வராஜ், சுந்தரம், சரவணன், வக்கீல் வி.வெங்கடேசன், தலைமைஆசிரியர்கள் மகேஸ்வரி, சுடர்கொடி, மரியஆரோக்கியசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சிகளில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 1,029 மாணவ, மாணவிகளுக்கும், ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,082 மாணவிகளுக்கும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 316 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 427 மாணவ–மாணவிகளுக்கு ரூ.90 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நமது மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சேர்த்து 11, 12–ம் வகுப்பு படிக்கும் 43 ஆயிரத்து 832 மாணவ–மாணவிகளுக்கு ரூ.16 கோடியே 29 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் குழந்தைகள் தினமான இன்று மாவட்டத்தில் வழங்கி தொடங்கி வைக்கிறோம்.

மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து வழங்கப்படும். இதேபோல் மாணவர்களுக்கு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வந்த திட்டங்களான சீருடை, காலணி, உலக வரைபடம், நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், ஸ்கூல் பேக், மடிகணினி உள்பட அனைத்து திட்டங்களும் தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி வருகிறார்.

நீங்கள் நல்லமுறையில் படித்து மாவட்டத்தில் கல்வித்தரத்தை உயர்த்தி தலைநிமிர செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆரணி மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு) பி.அசோகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்