சங்ககிரியில் பரபரப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் சிக்கியது

சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவை தொடர்ந்தும் நடந்தது. இதில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் சிக்கியது.

Update: 2018-11-14 22:45 GMT
சங்ககிரி, 

சேலம் மாவட்டம், சங்ககிரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சேலம் மெயின்ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பூபதி ராஜன் மற்றும் போலீசார் என மொத்தம் 12 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

அங்கு அவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கதவை பூட்டி விட்டு, அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த தனியார் வாகன ஓட்டுனர் பயிற்சி நிறுவன பணியாளர்கள் பலரையும் மடக்கி பிடித்தனர். அவர்களையும், அதே போல் பல்வேறு வாகன ஆவணங்கள் வாங்கி தருவதாக வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த இடைத்தரகர்கள் பலரையும் மடக்கி பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து, வாகன ஆய்வாளர்கள் தனபால், விஸ்வநாதன் மற்றும் பணியாளர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும் அலுவலக ஆவணங்களையும் அவர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

நள்ளிரவையும் தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியதாகவும், இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சோதனை தொடர்பாக நேற்று இரவு வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். நள்ளிரவை தொடர்ந்து சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்