மணல் குவாரி திறக்கக்கோரி கடலூர் சப்–கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

மணல் குவாரி திறக்கக்கோரி கடலூர் சப்–கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-11-14 22:45 GMT

கடலூர்,

கடலூர் தாலுகாவில் உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் குவாரியையே நம்பி உள்ளனர். ஆனால் சமீபகாலமாக மணல் குவாரிகள் திறக்க பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததால், மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச்செல்லும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டு மாட்டு வண்டிகள் பறிமுதலாகும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே கடலூர் தாலுகாவில் வானமாதேவி, விலங்கல்பட்டு, வான்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டிகளுக்கு மீண்டும் மணல் குவாரி திறக்கக்கோரியும், காவல்துறையினர் கைப்பற்றிய மாட்டு வண்டிகளை விடுவிக்கக்கோரியும், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் கடலூர் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்து சப்–கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் செல்லாத படி தடுக்க அலுவலக நுழைவு வாயில் கதவை போலீசார் மூடினார்கள். இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சப்–கலெக்டர் அலுவலகம் முன்பும், எதிரே உள்ள சாலையிலும் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க செயலாளர் திருமுருகன் தலைமையில் பிரதிநிதிகள் குழுவினர் சப்–கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றனர். அப்போது அலுவலகத்தில் சப்–கலெக்டர் சரயு, இல்லாததால், அவரது நேர்முக உதவியாளர் பன்னீர் செல்வத்திடம் திருமுருகன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்