சைதாப்பேட்டையில் பரபரப்பு; சேர்ந்து வாழ மறுத்த மனைவி கழுத்தை அறுத்து கொலை

சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னை சைதாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-11-14 22:00 GMT
சென்னை,

சென்னை குன்றத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). எலக்ட்ரீசியன். இவர் தனது முறைப்பெண்ணான சவுமியாவை (24) திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. காலப்போக்கில் கார்த்திக் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் குடிபோதையில் வந்து மனைவி சவுமியாவை அடித்து உதைத்து கார்த்திக் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையிலும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டது. இதனால் சவுமியா கோபித்துக்கொண்டு, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சைதாப்பேட்டை துரைசாமி தோட்டம் 2-வது தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து செல்வதற்காக கார்த்திக் நேற்று காலையில் சைதாப்பேட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். சவுமியாவை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார்.

ஆனால் சவுமியா சேர்ந்து வாழ மறுத்தார். அப்போது கார்த்திக்கை, சவுமியா தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டின் சமையல் அறையில் கிடந்த கத்தியை எடுத்துவந்து திடீரென்று சவுமியாவின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல அறுத்தார். கழுத்து அறுபட்டநிலையில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சவுமியா துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.

மனைவியை கொலை செய்த கார்த்திக் தானும் உயிர்வாழ விரும்பாமல் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார். கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இந்த பரபரப்பு சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடியபடி கிடந்த கார்த்திக்கை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். அவர் போலீஸ் பாதுகாப்போடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்