பெங்களூருவில் பரபரப்பு: போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல திருடனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்

போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல திருடனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

Update: 2018-11-14 22:15 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல திருடனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கைதானவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

பெங்களூரு பானசவாடி அருகே காச்சரக்கனஹள்ளியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தேகப்படும் படியாக ஒரு வாலிபர் சுற்றி திரிவதாகவும், அந்த வீட்டில் திருட அவர் முயற்சிப்பதாகவும் பானசவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விருபாக்‌ஷ சாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர், போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார். பின்னர் காச்சரக்கனஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக நின்ற வாலிபர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடனே அவரை போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது அவர், அங்கிருந்த சாக்கடை கால்வாயை தாண்டி, கே.ஜி.ஹள்ளி அருகே உள்ள ராம்தேவ் கார்டன் பகுதிக்கு சென்று விட்டார். அங்கு வைத்து போலீஸ்காரர்கள், அந்த வாலிபரை சுற்றி வளைத்தார்கள். மேலும் அவரை சரண் அடையும்படி போலீஸ்காரர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதே நேரத்தில் தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் மூர்த்தியை, அந்த வாலிபர் தாக்கினார். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வாலிபரை சரண் அடைந்துவிடும்படி, இன்ஸ்பெக்டர் விருபாக்‌ஷ சாமி எச்சரித்தார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வாலிபரை நோக்கி ஒரு ரவுண்டு இன்ஸ்பெக்டர் சுட்டார். இதில், வாலிபரின் காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் கைது செய்தார்கள்.

உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் வாலிபர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, வாலிபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் மூர்த்தியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த வாலிபர் நேபாள நாட்டை சேர்ந்த தினேஷ் போரா (வயது 28) என்பதும், பெங்களூரு உரமாவு அருகே வசித்து வந்ததும் தெரிந்தது. மேலும் பிரபல திருடனான தினேஷ், பெங்களூரு நகரில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. தினேஷ் மீது பானசவாடி, ஜே.பி.நகர், இந்திராநகர், குமாரசாமி லே-அவுட் போலீஸ் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு காச்சரக்கனஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் திருட முயன்றதையும் தினேஷ் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். கைதான தினேஷ் மீது பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல திருடனை சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்