கம்பத்தில் அதிவிரைவு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

கம்பத்தில் அதிவிரைவு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2018-11-14 23:15 GMT
கம்பம்,

மத்திய அரசின் பாதுகாப்பு படைகளில் ஒரு அங்கமான ஆர்.ஏ.எப். என்ற அதிவிரைவு படை வீரர்கள் 42 பேர் நேற்று முன்தினம் தேனி வந்தனர். இவர்கள் 5 நாட்கள் முகாமிட்டு மாவட்டத்தில் பதற்றமான இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று காலை ஆர்.ஏ.எப் அதிவிரைவு படை இன்ஸ்பெக்டர்கள் செபஸ்டின், சர்மா தலைமையிலான 35 பேர் கம்பத்தில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து அணிவகுப்பு தொடங்கியது. போக்குவரத்து சிக்னல், அரசமரம் வழியாக காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் பங்கேற்றனர். கம்பத்தில் நடந்த திடீர் அணிவகுப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) போடி உட்கோட்டத்தில் கோம்பை, தேவாரம், போடி ஆகிய இடங்களிலும், நாளை (வெள்ளிக்கிழமை) ஆண்டிப்பட்டி உட்கோட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெரியகுளம் உட்கோட்டத்தில் ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, பெரியகுளம் ஆகிய இடங்களிலும், 18-ந்தேதி தேனி உட்கோட்டத்தில் தேனி, அல்லிநகரம் ஆகிய இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடக்கிறது.

மேலும் செய்திகள்