வடமதுரை அருகே பெண் வெட்டிக்கொலை: ‘வட்டி பணம் கேட்டு திட்டியதால் கொன்றோம்’ - கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

பெண் வெட்டி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-14 23:28 GMT
வடமதுரை,

வடமதுரை அருகே பெண் வெட்டி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வட்டி பணத்தை கேட்டு திட்டியதால் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடமதுரை அருகேயுள்ள நல்லமனார்கோட்டையை அடுத்த சொட்டமாயனூரை சேர்ந்தவர் கணேசன், இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 43). இவர் அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு பஸ்சில் வந்தார். இதற்காக திருக்கண் பஸ்நிறுத்தத்தில் இறங்கிய அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பல், மஞ்சுளாவை ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் வட்டி பணம் வசூலில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொட்டணம்பட்டியை சேர்ந்த மல்லீஸ்முருகன், மதுபாலன், பெத்தான் என்ற பிச்சைமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட மஞ்சுளாவிடம், கடந்த ஆண்டு மல்லீஸ்முருகன் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். ஆனால், வட்டி பணத்தை முறையாக கொடுக்க முடியாமல் மல்லீஸ்முருகன் தவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டுக்கு மஞ்சுளா சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மல்லீஸ்முருகனின் தாயார் முருகாயிடம் பணம் கேட்டு மஞ்சுளா திட்டியுள்ளார்.

அதை அறிந்த மல்லீஸ்முருகன் கடும் ஆத்திரம் அடைந்தார். மேலும் மஞ்சுளாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதையடுத்து பணத்தை வாங்குவதற்கு திருக்கண் பஸ்நிறுத்தத்துக்கு வருமாறு மஞ்சுளாவிடம், மல்லீஸ்முருகன் கூறியிருக்கிறார். அதன்பேரில் அங்கு வந்த மஞ்சுளாவை, மல்லீஸ்முருகன் உள்பட 6 பேர் கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்