சட்டசபை முடிவுகளை அவமதிக்கும் கவர்னர் தேவையா? முதல்–அமைச்சர் நாராயணசாமி கேள்வி

சட்டசபையின் முடிவை அவமதிக்கும் கவர்னர் புதுவைக்கு தேவையா? என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

Update: 2018-11-15 00:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேருவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

விழாவில் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த நேருவின் உருவ படத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியா விடுதலை பெற்றபோது ஆங்கிலேயர்கள் பொருளாதாரத்தை சுரண்டி எடுத்துச் சென்றுவிட்டதால் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. அப்போது பிரதமர் பொறுப்பேற்ற நேரு நாட்டில் வளர்ச்சி ஏற்பட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினார். பிற நாடுகளோடு நல்லுறவு கொண்டார். புதுச்சேரிக்கு ஜிப்மர் மருத்துவமனையை நேரு தான் கொடுத்தார்.

புதுச்சேரி மாநில வளர்ச்சியில் நேருவின் பங்கு இருந்தது. இங்குள்ள தலைவர்களுடன் நெருங்கி பழகினார்.

ரோடியர், சுதேசி, பாரதி உள்ளிட்ட அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், நிர்வகிக்கவும் ரூ.786 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கு மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு பட்ஜெட்டிலும் இடம் பெறச் செய்து நிறைவேற்றப்பட்டது. ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் கடந்த 2 ஆண்டாக நிதி ஒதுக்கி கொடுத்து வந்தோம்.

மேலும் அரசு நிறுவனங்களை சீரமைக்க விஜயன் தலைமையில் குழு அமைத்தோம். அந்த குழுவும் எப்படி நிர்வாகம் செய்தால் லாபகரமாக கொண்டுவரலாம் என்று கருத்துக்களை பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து அமைச்சரவையில் வைத்து முடிவு எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி கேட்டு கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம்.

ஆனால் கவர்னர் அனுமதி தராமல் கோப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சகம் நிதி அதிகாரத்தை முதல்–அமைச்சர், அமைச்சர்கள், செயலாளர்களுக்கு பிரித்து அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதையும் செய்ய மறுத்து, அரசு நிறுவனங்களை மூட கட்டளையிட்டு வருகிறார்.

கவர்னர் விளக்கம் கேட்கலாமே தவிர, உத்தரவிட முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு நிதி ஒதுக்க முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராடுகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு புதுவை அரசுக்கு களங்கமும், கெட்ட பெயரும் ஏற்படுத்தும் வகையில் கவர்னர் செயல்படுகிறார். இதை பிரதமர் தூண்டுகிறாரா? என்பது தெரியவில்லை.

இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எதற்கும் விடிவுகாலம் உண்டு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவர்னர் ஏற்பதில்லை. இது குறித்த புகாரை பிரதமர் கேட்பதில்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார். மோடி மற்றும் பா.ஜ.க.வால் காங்கிரசை அசைத்துக் கூட பார்க்க முடியாது.

பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். ரபேல் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை.

பா.ஜ.க.விற்கு மக்கள் 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் அவர்கள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே அதை பயன்படுத்தினர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளாலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கி வருகின்றனர். தற்போது ரூ.4.75 லட்சம் கோடி தர மறுத்த இந்திய ரிசர்வ் வங்கியை தாக்கி வருகின்றனர்.

புதுச்சேரியில் தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராடுவதற்கு காங்கிரஸ் அரசு காரணம் இல்லை. கவர்னரின் அதிகார துஷ்பிரயோகம்தான் காரணம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு முடிவையும், சட்டசபை முடிவுகளையும் ஏற்க மறுத்து, அவமதிக்கும் கவர்னர் புதுவைக்கு தேவையா? அதிகார துஷ்பிரயோகத்தில் எல்லையே இல்லாமல் செயல்படுகின்றார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். ராகுல்காந்தி பிரதமர் ஆக புதுச்சேரியில் இருந்து ஒரு எம்.பி. கை தூக்கவும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்