கூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார்

கூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடனுதவியை பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார்.

Update: 2018-11-15 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 65–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, கூட்டுறவு சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல் கருத்தரங்கம் மற்றும் பொது மருத்துவ முகாம் சங்க வளாகத்தில் நடந்தது.  விழாவுக்கு அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பால்வள தலைவருமான எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கி கொடியேற்றிவைத்து பேசினார்.

விழாவில் கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்ற மக்களின் பொருளாதாரம் உயர்வதற்கும், கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் கடன்களை வழங்கி வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாய கடன், சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்ய கடன் என பல்வேறு கடன்களை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, விழாவில் 16 விவசாய கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு ரூ.15½ லட்சம் பயிர் கடனும், தொழில் கடன் ரூ.46 லட்சமும், 2 பேருக்கு சிறுதொழில் கடன் ரூ.70 ஆயிரமும் உள்பட மொத்தம் ரூ.66 லட்சத்து 30 ஆயிரம் கடன் உதவிகளை எஸ்.ஏ.அசோகன் வழங்கினார். மேலும் மருத்துவ முகாமில் 200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் சுப்பையா, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சங்கரன், கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் முகமது ஷாபி, கடன் சங்க தலைவர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்