சங்கரன்கோவில் அருகே இருதரப்பினர் மோதல்: கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை கைது செய்தவர்களை விடுதலை செய்ய கோரிக்கை

சங்கரன்கோவில் அருகே இருதரப்பினர் மோதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-11-15 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலாபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியனை சந்தித்தும் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் அனைவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் ஊரில் இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

எங்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் 2 பேர் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


ஆனால் போலீசார் எங்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஊரில் உள்ள ஆண்கள் மீதும், மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள்.

காவல்துறையினரிடம் இருந்து எங்கள் ஊரைப் பாதுகாக்க வேண்டும். கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்