குறிஞ்சிப்பாடியில் காய்கறி சாகுபடி கருத்தரங்கு கலெக்டர் தொடங்கி வைத்தார்

குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற உயர் தொழில்நுட்ப காய்கறி சாகுபடி கருத்தரங்கை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-15 22:15 GMT
கடலூர், 

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மூலம் மாவட்ட அளவிலான உயர் தொழில்நுட்ப காய்கறி சாகுபடி மற்றும் மின்னணு வேளாண் விற்பனை கருத்தரங்கு குறிஞ்சிப்பாடியில் நடந்தது. இந்த கருத்தரங்கை கலெக்டர் அன்புசெல்வன், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பவர் டில்லர், மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 822 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இதில் கத்தரி, மிளகாய், பாகல், புடல், வெண்டை,சுரை, பரங்கிக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகள் முக்கிய பயிர்களாக பயிரிடப்பட்டு வருகிறது.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வெங்கடாம்பேட்டை, கீழூர், அன்னதானபேட்டை, வடக்குத்து, புலியூர், விருப்பாட்சி ஆகிய கிராமங்களில் அதிக அளவில் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மட்டும் 1100 ஹெக்டேர் பரப்பில் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. காய்கறிகள் சாகுபடி அபிவிருத்திக்காக தோட்டக்கலை துறை மூலம் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானாவரி பயிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மரவள்ளி பயிரில் ஊடுபயிராக பயிர் வகைகள் பயிர் செய்வதற்கு 200 ஹெக்டேர் பரப்புக்கு 53 லட்சத்து 43 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் தோட்டக் கலைத்துறை மூலமாக அமைத்துக்கொடுக்கப்படுகிறது. இதில் காய்கறி பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்யும் போது தண்ணீர் சிக்கனம் மட்டுமல்லாது திரவ உரங்களையும் சொட்டுநீர் பாசனம் மூலம் வழங்கலாம். இதனால் அதிக மகசூல் கிடைப்பதோடு அதிக வருவாய் ஈட்ட முடியும்.

எனவே தோட்டக்கலைத்துறை மூலம் செய்படுத்தப்படும் இத்திட்டங்களை விவசாயிகள் வட்டார அளவில உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். இக்கருத்தரங்கில் தோட்டக்கலைத்துறை துணை இயக் குனர் ராஜாமணி, வேளாண்மை துணை இயக்குனர் ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் வட்ட மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் ஜெகதீசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்