செந்துறை அருகே அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் தர்ணா

செந்துறை அருகே அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-15 23:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாக குறிச்சிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவந்தனர். இது மாணவர்களுக்கு போக்கு வரத்து மற்றும் பல காரணிகளுக்கு வசதியாக இருந்தது. இந்த நிலையில் ஆலத்தியூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு தேர்வு மையத்தை மாற்றியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களான நாங்கள் தனியார் பள்ளியின் சூழ்நிலைகளில் தேர்வு எழுத செல்லும் போது எங்களுக்கு ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியர் முத்தமிழ்செல்வன் மற்றும் தளவாய் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தகவல் அறிந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் பரிந்துரையின் பேரில், குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், தனியார் பள்ளி தூரமாக இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் அங்க சென்று தேர்வு எழுத விரும்பவில்லை. ஆகையால் முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.

மேலும் செய்திகள்