புயல் முன்எச்சரிக்கை: புயல் பாதுகாப்பு மையங்களில் 4,027 பேர் தங்க வைப்பு

கஜா புயலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையங்களில் 4 ஆயிரத்து 27 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-11-15 22:15 GMT
கடலூர், 

கஜா புயலையொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி புயலால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக கடலூர் மாவட்டத்தில் நிரந்தரமாக 42 புயல் பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு மையங்களில் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட கூடும் என்று கண்டறியப்பட்ட கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 30 மையங்களில் நேற்று இரவு 8.30 மணி நில வரப்படி 4 ஆயிரத்து 27 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் சார்பில் கடலூர் சுப்புராயலுரெட்டியார் திருமண மண்டபத்தில் 2 ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது. அந்த உணவை பெற்ற நகராட்சி அதிகாரிகள், அதை கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள மையங்களில் தங்கி இருக்கும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மதிய உணவு 2 ஆயிரம் பேருக்கு வழங்க இருப்பதாகவும் தென்னிந்திய ரெட்டி ஜன சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்