திருப்பூரில், அரசு ஊழியர்கள் சார்பில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

திருப்பூரில், அரசு ஊழியர்கள் சார்பில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

Update: 2018-11-15 22:45 GMT
திருப்பூர்,

அரசு பணியிடங்களில் ஆள் சேர்ப்பதை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியை கைவிடக்கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடந்தது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்ததால், அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அங்கு கூடிய அரசு ஊழியர்கள் ஏராளமானோர் அரசு பணியிடங்களில் ஆள் சேர்ப்பதை தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும், நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும், அரசு பணம் விரையமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அம்சராஜ், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், சாலை பணியாளர் சங்க மாநில பொதுசெயலாளர் பாலசுப்பிரமணியம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த அரசாணை நகலை திடீரென தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ஆணைகளை எரிக்க விடாமல் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்