கஜா புயல்: சூறாவளியில் சிக்கி 158 மரங்கள், 20 மின்கம்பங்கள் சாய்ந்தன

கஜா புயலின் தாக்கத்தால், சூறாவளிகாற்றில் சிக்கி மாவட்டம் முழுவதும் 158 மரங்கள், 20 மின்கம்பங்கள் சாய்ந்தன.

Update: 2018-11-16 22:45 GMT
கடலூர்,

கஜா புயல் கடலோர பகுதியை நெருங்கியதும் கடலூர் மாவட்டத்திலும் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுழற்றி அடித்த சூறாவளி காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் மரங்கள் அங்கும், இங்குமாக தலைவிரித்து ஆடின. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.

பலத்த காற்று காரணமாக கடலூர் கோண்டூரில் சாலையோர மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையோரத்தில் நின்ற மின்கம்பங்களும் சாய்ந்தன. அதேபோல் செம்மண்டலம், சாவடி பகுதிகளிலும் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. தாழங்குடா மீனவ கிராமத்தில் தென்னை மரங்கள் சாய்ந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் விரைந்து சென்று புயலில் சாய்ந்த மரங்களை மரம் அறுக்கும் எந்திரங்கள் கொண்டு அறுத்து, பொக்லைன் எந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்தினர். அதேபோல் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை மின்சாரத்துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் சூறாவளி காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் விருத்தாசலம், புதுச்சத்திரம், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. நேற்று காலை நேர நிலவரப்படி மாவட்டத்தில் 158 மரங்கள், 20 மின்கம்பங்கள் விழுந்ததாகவும், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்கம்பிகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்