வானூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

வானூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2018-11-16 22:45 GMT
விழுப்புரம்,

‘கஜா’ புயலால் வானூர், மரக்காணம் பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்றும், சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதும் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊராட்சி பகுதிகளில் ஏதேனும் மின் இணைப்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, தெரு விளக்குகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தாலோ உடனுக்குடன் அவற்றை சரிசெய்யவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து சுகாதாரமான முறையில் வினியோகம் செய்ய வேண்டும். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்றவும், கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரிசெய்து மழைநீர் சீராக வெளியேற அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து அவற்றை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்