பழவேற்காடு ஏரியில் மீனவர் வலையில் சிக்கிய அம்மன் சிலை

பழவேற்காடு ஏரியில் மீனவர் வலையில் அம்மன் சிலை ஒன்று சிக்கியது.

Update: 2018-11-16 22:45 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 26). இவர் தனது நண்பர் பாலாஜி (18) என்பவருடன் நேற்று படகில் அதே பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க சென்றார்.

அங்கு உள்ள நடுத்தண்ணீர் என்ற பகுதியில் வலை விரிக்கும் போது மீனவர் பாலாஜியின் வலையில் கற்சிலை ஒன்று சிக்கியது.

1½ அடி உயரம் உள்ள அந்த கற்சிலை காயத்ரி அம்மன் சிலை ஆகும். அந்த சிலை மீனவர் வலையில் சிக்கியதை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். வெள்ளிக்கிழமை அன்று சுண்ணாம்புகுளம் கிராமத்தில் காயத்ரி அம்மன் சிலை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலைக்கு குங்குமம் பொட்டு, பூ வைத்து தேங்காய் உடைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ரதி, கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் சுண்ணாம்புகுளம் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிலையை மீட்டு கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் புகழேந்தியிடம் ஒப்படைத்தனர்.

பழவேற்காடு ஏரியில் நடுத்தண்ணீர் என்ற பகுதியில் அம்மன் சிலை கிடைத்ததை தொடர்ந்து அந்த பகுதியில் வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா? பழவேற்காடு ஏரியில் படகு மூலம் சிலையை கொண்டுவந்து வீசிவிட்டு சென்றது யார்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்