பலத்த மழை: ஊட்டியில் படகு சவாரி நிறுத்தம்

ஊட்டியில் பலத்த மழை காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.

Update: 2018-11-16 22:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று முன்தினம் காலையில் இருந்தே வெயில் அடித்தது. வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகளவில் இருந்ததை காண முடிந்தது. இந்த நிலையில் இரவில் ஊட்டி நகரில் லேசான சாரல் மழை பெய்தது. நள்ளிரவு 1 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சில இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக ஊட்டி ராஜ்பவன் வளாகத்தில் நான்கு மரங்கள் முறிந்து கீழே விழுந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்கள் அதிகாலையில் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதற்கிடையே நேற்று காலையில் இருந்தே ஊட்டி நகரில் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பள்ளி மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்கிறவர்கள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி சென்றனர்.

மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் முன் எச்சரிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் மிதி படகுகள், துடுப்பு படகுகள் ஓரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த படகுகளில் மழைநீர் தேங்கி நின்றது. நேற்று முழுவதும் படகு சவாரி நிறுத்தப்பட்டதால், மழையின் நடுவே படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக குடைகளை பிடித்தபடி பூங்காவை கண்டு ரசித்தனர்.

மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. அதன் காரணமாக சுற்றுலா தலங்களில் வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. மேலும் கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகள் அணிந்து இருந்தனர். ஊட்டியில் பிங்கர்போஸ்ட், எல்க்ஹில், கோடப்பமந்து, நொண்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மேகமூட்டம் சூழ்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டர்) வருமாறு:–குந்தா–2, கேத்தி–11, கோத்தகிரி–5, நடுவட்டம்–2, ஊட்டி–21.2, கல்லட்டி–19, கிளன்மார்கன்–12, அப்பர்பவானி–2, எமரால்டு–3, அவலாஞ்சி–2 என மொத்தம் 79.2 மழை பதிவாகி உள்ளது. இது 4.66 சராசரி ஆகும்.

மேலும் செய்திகள்