திருவாரூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயலுக்கு மேலும் 5 பேர் பலி

திருவாரூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயலுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள். தாய் கண் முன்னே 2 வயது குழந்தையும் பலியானது.

Update: 2018-11-16 22:30 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் வீரமணி. விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய 2 வயது ஆண் குழந்தை சுதர்சன். நேற்று முன்தினம் இரவு சுதர்சன் தனது தாய் தனலட்சுமியுடன் வீட்டுக்கு பின்புறம் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் தூங்கி கொண்டிருந்தான். அப்போது வீசிய கஜா புயல் காரணமாக கொட்டகை சரிந்து விழுந்தது.

இதில் குழந்தை சுதர்சன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். தனலட்சுமிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் கண்முன்னே 2 வயது குழந்தை கஜா புயலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல பரவாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி நகுலன் (வயது70) என்பவர் கஜா புயல் வீசிக்கொண்டிருந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு மரம் முறிந்து நகுலன் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (80) என்பவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது புயல் மற்றும் பலத்த மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி லட்சுமி இறந்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோட்டூர் அருகே உள்ள பைங்காட்டூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கோவிந்தராசு. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பானுமதி (48). கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது புயல் மற்றும் மழையால் சேதமடைந்து இருந்த சுவர் இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி பானுமதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதேபோல் வடுவூர் அருகே உள்ள கருவாக்குறிச்சியில் நேற்று காலை மரம் முறிந்து விழுந்ததில் அப்பகுதியை சேர்ந்த பிரதீப் மகன் கணேசன் (9) என்ற 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான். (முன்வந்த செய்தி 18-ம்பக்கம்)

மேலும் செய்திகள்