தமிழகத்தில் அணைகளை தூர்வார எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட அணைகளை தூர்வார என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-16 22:12 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை, கொடிவேரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சாத்தனூர் ஆகிய அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் பிடிப்பு பகுதியை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அணைகளில் 10 முதல் 20 அடி வரை மணல், சகதி, களிமண் தேங்கியுள்ளது. இதனால் தண்ணீர் தேங்கும் பரப்பளவு குறைந்து தண்ணீர் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அணைகள் மற்றும் ஆற்றுப்படுகையின் அருகில் வசிப்பவர்களும் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளனர்.

போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அதனை தடுப்பது அரசின் கடமை. ஆனால் அணைகளை தூர்வாரி, பராமரிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கண்ட அணைகளை தூர்வாரி, பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார உத்தரவிடக்கோரி குமரி மகாசபை சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அணைகளை தூர்வார திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது என்றார். அதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘‘இந்த வி‌ஷயத்தில் தொடர்ந்து இதே பதில்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அணையை தூர்வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என குற்றம் சாட்டினர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அணைகளை தூர்வார என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பினார்.

பின்னர் அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை டிசம்பர் மாதம் 10–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்