வெம்பக்கோட்டை அருகே சாலை வசதியின்றி கிராமத்தினர் அவதி

வெம்பக்கோட்டை அருகே சாலை வசதியின்றி கிராமத்தினர் அவதியடைகிறார்கள்.

Update: 2018-11-16 22:30 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகிலுள்ள விஜயகரிசல்குளம், துரைச்சாமிபுரம், வல்லம்பட்டி கிராமத்தினர் அங்குள்ள வைப்பாற்றின் வழியாக தாயில்பட்டி வந்து ஏழாயிரம்பண்ணை செல்வதற்கு கரடு முரடான மண் சாலையை பயன்படுத்துகின்றனர். இதனருகே வைப்பாறு இருப்பதால் இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையோ அதனை மறுக்கிறது.

இவ்வாறு இருவரும் பாராமுகம் காட்டுவதால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட காலமாக மண் சாலையாகவே உள்ளது. இரு புறமும் உயரமாக இருப்பதால் மழைக்காலத்தில் மண் சரிந்து சாலையில் விழுகிறது. இதனால் ஒரு மழை பெய்தால் ஒரு வார காலத்துக்கு சேரும் சகதியுமாக காட்சி தருகிறது. இரு சக்கரவாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.

இந்த சாலையை தவிர்த்தால் மாற்றுப்பாதையில் கூடுதலாக 20 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சாலையும் தரைப்பாலமும் அமைத்து 20 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்