கணவர் மது பழக்கத்தை கைவிட தீக்குளித்த பெண் படுகாயம்-குழந்தை பலி

கணவரின் மது பழக்கத்தை கைவிடக்கோரி தீக்குளித்த பெண் படுகாயம் அடைந்தார். இதில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2018-11-17 22:15 GMT
அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டம் இலந்தைக்குழி பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவர் தற்போது அரியலூர் எத்து ராஜ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள விளம்பர பதாகைகள் தயாரிக்கும் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். கதிரவனுக்கு திருமணமாகி மீனா(வயது 24) என்கிற மனைவியும், சந்தீப்ரோசன்(1) என்ற மகனும் உள்ளனர். கதிரவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் வேலை முடிந்து விட்டு வீட்டிற்கு வரும்போது மது குடித்து வருவது வாடிக்கையானது. அதனை அவரது மனைவி மீனா கண்டித்து வந்தார். ஆனால் கதிரவன் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கதிரவன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீனா, கதிரவனிடம் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லையென்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து மீனா தற்கொலை செய்து கொள்வது போல் கணவரை மிரட்டுவதற்காக இடுப்பில் மகன் சந்தீப்ரோசனையை தூக்கி வைத்து கொண்டு தனது உடலில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து ஊற்றி தீக்குச்சியை பற்ற வைக்க போவதாக கூறினார். அப்போது எதிர்பாராதவிதமாக தீக்குச்சியில் தீ பிடித்து விட்டது. தீக்குச்சியில் பிடித்த தீ திடீரென்று அவரது உடலிலும் பிடித்தது. மேலும் குழந்தை சந்தீப்ரோசன் மீது தீ பரவியது. இதனால் தீயின் வெப்பம் தாங்காமல் தாயும், மகனும் வலியால் அலறி துடித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கதிரவன் மனைவியையும், மகனையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் அவர்கள் கிட்ட செல்லமுடியவில்லை. இதையடுத்து அவர் வீட்டை விட்டு ஓடி சென்று, அக்கம், பக்கத்தினரிடம் நடந்தவற்றை கூறி உதவியை நாடினார். அவர்களும் ஓடி சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால் மீனாவும், சந்தீப்ரோசனும் தீயில் கருகினர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் போலீசார் பலத்த தீக்காயமடைந்த தாய்- மகனையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தீப்ரோசன் பரிதாபமாக உயிரிழந்தான். மீனா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்