குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-11-17 22:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இவற்றில் சின்னவளையம் அருகில் உள்ள மணக்கரை கிராமம் 3-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்மோட்டார் பழுதடைந்து இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று மாலை மணக்கரை சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, கிராம நிர்வாக அலுவலர் சுதாமதி, நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்