விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்க ரூ.575 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்க ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Update: 2018-11-17 23:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று மாலை மாவட்ட அளவிலான 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் மலர்விழி அனைவரையும் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன் திட்ட விளக்கவுரையாற்றினார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து, 949 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 74 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளையும் மற்றும் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். அதன் பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு வணிகர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் பயனடைந்துள்ளனர். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகள், பயிர் காப்பீடு தொகையாக ரூ.4 ஆயிரம் கோடி செலுத்தினார்கள். அவர்களுக்கு இழப்பீடாக ரூ.97 கோடி வழங்க ஒப்புதல் பெறப்பட்டு தற்போது ரூ.87 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை விரைவில் வழங்கப்படும்.

விழுப்புரம் மாவட்டம் நெல் உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. இந்தாண்டு பயிர் கடன் வழங்க அரசு முதலில் ரூ.465 கோடி ஒதுக்கீடு செய்தது. பின்னர் மீண்டும் ரூ.110 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தற்போது வரை ரூ.303 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நகைக்கடனாக ரூ.265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி வெளிப்படை தன்மையாக பயிர் கடனுக்கும், நகைக்கடனுக்கும் தனித்தனியே நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பயிர் கடன் வழங்க ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில்தான் கூட்டுறவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வாக 20 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

விழாவில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைப்பதிவாளர் சிவமலர், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு துணைப்பதிவாளர்கள் சாயிராம், தயாளன், நளினா, சுகுமார், பால்ராஜன்வில்லியம், எக்ஸ்பெதித்தா, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சரவணன், ஆவின் பொது மேலாளர் வசந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் கூட்டுறவு சார்பதிவாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்