கேரளாவில் இருந்து திரும்பிய திருப்தி தேசாய்க்கு எதிராக மும்பையில் போராட்டம்

கேரளாவில் இருந்து திரும்பிய திருப்தி தேசாய்க்கு மும்பை விமான நிலையத்தில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-17 22:48 GMT
மும்பை,

புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவராக இருந்து வருபவர் திருப்தி தேசாய். இவர் சபரிமலைக்கு செல்ல தன்னுடன் 5 பெண்களை அழைத்து கொண்டு கொச்சி விமான நிலையம் சென்றார். இதை அறிந்த பல்வேறு இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். மேலும் அவரை வெளியே வரவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி அவரை அங்கிருந்து போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திருப்தி தேசாய் தனது ஆதரவாளர்களுடன் மும்பை விமான நிலையம் வந்து இறங்கினார்.

இதை அறிந்த சபரிமலை அய்யப்ப சேவா சங்கம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் நலசங்கம் உள்பட அமைப்பினர் விமான நிலையத்தில் திரண்டனர். அவருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி அறிந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தி அவரை பத்திரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி புனே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்