விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு பகுதியில் சுகாதார வளாகம் தேவை; மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Update: 2018-11-17 23:05 GMT

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டின் இருபுறமும் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. வடபுறம் வெளிநோயாளிகள் சிகிச்சைபிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சைபிரிவு ஆகியவை இயங்கி வருகிறது. தினசரி 50 மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமமூர்த்தி ரோட்டின் தென்புறம் பிரசவ வார்டு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நவீன சிகிச்சைக்கான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிரசவத்திற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் இருந்து பிரசவத்திற்காக கர்ப்பிணிப்பெண்கள் இங்கு அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.

ஆஸ்பத்திரியின் அருகில் அமைக்கப்பட்டிருந்த அடிபம்பு சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டுவிட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உரிய தண்ணீர் வசதி இல்லாத நிலை நீடிக்கிறது. மேலும் சுகாதார வளாகமும் இல்லாத நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த ஆஸ்பத்திரி அருகிலும் வேறு பொது சுகாதார வளாகம் இல்லாத நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார வளாகம் அமைக்க சிறப்பு நிதிஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் விசைப்பம்பு அமைத்து தண்ணீர் வசதி செய்து தரவேண்டியதும் அவசியமாகும்.

மேலும் செய்திகள்