பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-11-17 23:18 GMT

சிவகங்கை,

மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் உள்ள சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுபணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமன் தலைமை தாங்கினார். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மூவேந்தன், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 2ஆண்டு பணி முடித்த பல்நோக்கு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 5–ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு இட மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் முத்துக்குமார், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரங்கநாதன்.

அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பத்மநாபன் சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பூமிராஜன், கிராம உதவியாளர் சங்க ஆதீஸ்வரன். பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பொன்னுத்துரை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்