சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் 2 பேர் பலி - திருப்பூரில் பரிதாபம்

சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-11-17 23:34 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் சரக்கு வேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியின் மகன் சந்துரு என்கிற சந்திரசேகர்(வயது 18). இதுபோல் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் லோகேஷ்(19). இவர்கள் இருவரும் நண்பர்கள். பனியன் நிறுவன தொழிலாளர்கள் ஆவார்கள். நேற்று மாலை இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சந்துரு ஓட்ட, லோகேஷ் அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தார். அமர்ஜோதி கார்டன் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச்செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சந்துரு, லோகேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயத்துடன் இருவரும் உயிருக்கு போராடினார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்தில் பலியான லோகேஷ், சந்துரு ஆகியோரின் உடலை அவர்களின் பெற்றோர், உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர். அவர்கள் 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்