வளசரவாக்கத்தில் செல்போன் பறித்த 4 சிறுவர்கள் கைது

வளசரவாக்கத்தில் செல்போன் பறித்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-11-18 23:00 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை தாக்கியும், மிரட்டியும் செல்போன்களை பறித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து செல்போன் பறிப்பு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் செல்போன்களை பறிகொடுத்தவர்கள் அளித்த செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதில் ஒரு செல்போன், வளசரவாக்கத்தில் ‘ஆன்’ செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவது தெரிந்தது.

அந்த செல்போன் கோபுர சிக்னலை வைத்து வளசரவாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தனது நண்பர்களான மேலும் 3 பேருடன் சேர்ந்து வளசரவாக்கம் பகுதியில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து 15 முதல் 17 வயது உடைய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள், இரவு நேரத்தை காட்டிலும் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு தனியாக நடந்து வருபவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அந்த நேரத்தில்தான் போலீசாரின் கெடுபிடி குறைவாக இருக்கும் என்பதால் இதுபோல் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இவர்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி, அதில் சென்றும் செல்போன் மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது போலீசாரை கண்டால், திருடிய மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதும் தெரியவந்தது.

கைதான 4 பேரிடம் இருந்து 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், 3 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்