முகமது நபி குறித்து முகநூலில் அவதூறு: பாரதீய ஜனதா பிரமுகர் மீது வழக்குப்பதிவு

முகமது நபி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பாரதீய ஜனதா பிரமுகர் கல்யாணராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-11-18 22:30 GMT

கோவை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி நவ்பல் தலைமையில் நிர்வாகிகள் கோவை நகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரணை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் ‘பாரதீய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் என்பவர் முகநூலில் (பேஸ்புக்) இறைதூதர் முகமது நபி பற்றியும், அவரது மனைவியை பற்றியும் அவதூறு செய்து, இருதரப்பினர் இடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்துள்ளார்.

அவரது நண்பர்கள் பட்டியலில் உள்ள ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன், கிரிஷ் ஜனார்த்தன் உள்பட 11 பேர் இதை மற்றவர்களுக்கு அனுப்பி உள்ளனர். எனவே கல்யாணராமன் மற்றும் அவரது நண்பர்களின் முகநூல் பக்கங்களை முடக்கம் செய்ய வேண்டும். அதோடு, சம்பந்தப்பட்டவர்களை தடுப்புக் காவல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதேபோல் இந்திய தேசிய கட்சி மாநில செயலாளர் முகமது பிலால் தலைமையில் போலீஸ் துணை கமி‌ஷனரை சந்தித்து கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கமி‌ஷனர் சுமித் சரண் குனியமுத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கல்யாணராமன் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)– இரு பிரிவினர் இடையே கலவரத்தை ஏற்படுத்துதல், 505(2)– அவதூறு பரப்புதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்